Wednesday 26 December 2018

வாடிக்கையாளர் சேவைகள்


சில வருஷங்களுக்கு முன் கூட மக்களுடைய பொதுவான புகார் ஒண்ணு உண்டு. கம்பெனி சர்வீஸ் சரியில்லை. கூடா எடுக்கறதில்லை; எடுத்தா புகாரை சரியா பதிவு செய்யறதில்லை; பதிவு செய்யறாங்களோ இல்லையோ ரெஃபரன்ஸ் நம்பர் தரதில்லை. பாலோ அப் இல்லை. திருப்பி திருப்பி புகார் செய்ய வேன்டி இருக்கு.
 இது எவ்வளவு தூரம் எதிர்மரை எண்ணங்களை வளர்ட்ய்து இருக்குன்னா பலரும் பிரச்சினை வந்தால் அது ரொம்ப விலை அதிகமானதா இருந்தால் ஒழிய இந்த வழியை நாடறதில்லை. ஒழியறதுன்னு விட்டுவிட்டு புதுசா வாங்கிடுவாங்க.

ஆனா சமீப காலமாக இதெல்லாம் முன்னேற்றம் கண்டு இருக்கு.

இன்னைக்கு என் உ.பி.த வாசு பாலாஜி ஷேர் செய்த விஷயம்.
--
நல்ல விஷயம்.

ஓரியண்ட்ல கப்லட்னு ஒரு ஃபேன் 4 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. 2 ப்ளேட் யிங் யாங் கான்ஸப்ட். ஒரு ஃபேன் கொஞ்ச நாளா கொட கொடன்னு சவுண்ட். பார்த்தா ஒரு ப்ளேட்ல ரிவட் அடிச்ச இடம் உடைஞ்சிருக்கு. பாரீஸ் கார்னர்ல நார்மல் ஃபேன்னா ஸ்வீப் சைசுக்கு டூப்ளிகேட் கிடைக்கும். ஆனா சமயத்துல ப்ளேட் வெயிட்ல வித்தியாசம் வந்து லக்குவான் அடிச்ச மாடு மாதிரி ஒரு பக்கமா இழுக்கும். இதுல கப்லெட் ப்ளேட் கிடைக்குமான்னு டவுட்டு.

சரி எதுக்கும் பார்ப்போம்னு ஓரியண்ட் சைட்ல போய் ஈகாம் சர்வீசுக்கு ஒரு மெயிலுட்டேன். மெயில் செண்ட் மெசேஜ் மறையறதுக்குள்ள ரிப்ளை. சர்தான்..ஆடோ ரிப்ளையா இருக்கும்னு நினைச்சுண்டு ஓப்பன் பண்ணா, அய்யோ ரொம்ப சாரி..உங்க அட்ரஸ், காண்டாக்ட் நம்பர் குடுங்க பார்க்கறோம்னு மெயில் வந்திச்சு.

ம்க்கும்..என்னாத்த நீ பாக்கறது..நான் என்ன கேட்டேன். இந்த மாதிரி ப்ளேட் உடைஞ்சு போச்சு. ப்ரவுன் அண்ட் வைட். புது ப்ளேட் ஒரு செட் வேணும். எங்க கிடைக்கும்னுதானன்னு நினைச்சிண்டே டீடெயில் மெயில் பண்ணேன்.

அடுத்த நிமிஷம் ஒரு எஸ் எம் எஸ் வந்துச்சு. கம்ப்ளெயிண்ட் நம்பர் இது. எங்க சர்வீஸ் ஆள் ஃபோன் பண்ணுவான்னு. கொஞ்ச நேரத்துல லோகல் நம்பர்லருந்து ஒரு எஸ் எம் எஸ். இந்த கம்ப்ளெயிண்ட் நம்பர் வந்திருக்கு. கூடிய சீக்கிரம் ஆள் வரும்னு. இதெல்லாம் திங்கள் கிழமை.

நேத்து கார்த்தால கர்கோனுலருந்து ஃபோன். நீ கம்ப்ளெயிண்ட் குடுத்தியே..ஃபோன் வந்திச்சானு கேட்டான். இல்ல. கம்ப்ளெயிண்ட் நம்பர் வந்துச்சு. எங்காளு வருவான்னு ஒரு எஸ் எம் எஸ் வந்துச்சு அவ்ளோதான்னேன். அய்யோ ரொம்ப சாரி. இன்னைக்குள்ள ஆள் வருவான். நான் என்ஷூர் பண்ணிக்கறேன்னான். கொஞ்ச நிமிஷத்துல இன்னோரு ஹிந்திக்காரன், சார் கம்ப்ளெயிண்ட் பண்ணீங்களா. இன்னைக்குள்ள ஆள் வருவான் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னான். இதென்னடா அநியாயத்துக்கு செல்லம் கொஞ்சுறானுவன்னு நினைச்சிண்டே இருந்தா வீட்லருந்து ஃபோன். சர்வீஸ் ஆள் வந்து பார்த்துட்டு சார் இது ஓல்ட் மாடல் சார்னான். இப்ப கூட ஓரியண்ட் சைட்ல இருக்கு. ஆன்லைன்ல வாங்க முடியும். அப்புறம் என்ன ஓல்ட் மாடல்னு கெத்து காட்டினேன். சார் சார் இருங்க சார். ப்ளேட் ஸ்டாக்ல இல்ல சார். ஆர்டர் பண்ணி ஒரு வாரத்துல மாத்தி குடுத்துடலாம் சார். ஆர்டர் பண்ணவா. 600 ரூ ஆகும்னான். அததான கேட்டேன். நீ கொண்டு வந்து மாட்டுன்னேன். சரின்னு போயிட்டான்.

கொஞ்ச நேரத்துல கர்கான் காரன் ஃபோன் பண்ணான். ஆளு வந்து அட்டண்ட் பண்ணிட்டான்னு தகவல் வந்திருக்கு. வந்தானான்னான். ஆமாம். ப்ளேட் ஸ்டாக் இல்ல. ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வந்து மாட்டுறேன்னு சொல்லீட்டு போயிருக்கான்னேன். ஓ அப்டியா நான் ஃபாலோ பண்ணி அனுப்பி வச்சிட்டு ஃபாலோ பண்றேன். தேங்க் யூ ஃபார் யுவர் கோ ஆபரேஷன்னான்.

இப்பிடியுமா கன்சூமர் சர்வீஸ் இருக்கும்?
--

அடுத்த முறை நமக்கு இதே போல சர்வீஸ் கிடைக்கறதோ இல்லையோ முயற்சி செஞ்சு முடியலைன்னா திட்டிட்டு அப்புறமா புதுசு வாங்கறதை பார்க்கலாம்!

Tuesday 25 December 2018

போகி பீல் பாலம்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=2176854

இன்றைக்கு இந்தியாவின் மிக நீளமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் திறந்து வைத்து இருக்கிறார். சாலை போக்கு வரத்தும் கீழடுக்கில் ரயில் பாதையும் உள்ளன. எல்லைப்புறத்தில் அமைந்துள்ள இதில் தேவையானால் போர் விமானங்கள் இறங்க முடியும் என்பது நான் பார்க்கும் மறைந்துள்ள நல்ல சேதி!

https://www.google.com/maps/place/Bogibeel+Bridge/@27.5413143,91.3813182,8z/data=!4m5!3m4!1s0x0:0xdd145fb3135988ca!8m2!3d27.4082954!4d94.7603882

Monday 24 December 2018

என்னத்த...

நல்ல நாள்லேயே செய்தியோட உண்மைத்தன்மையை உறுதி படுத்திக்கறது பாடு. இதுல இப்படி எல்லாம் நடந்தா எதை நம்பறது எதை விடறது? உலகே மாயம்ன்னு சொல்லிட்டு போயிடலாம் போலிருக்கு,

டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா செய்தி போட்டாங்க. மிட்சல் ஜான்சன்னு ஒரு ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் வீரரை பேட்டி எடுத்ததா. ஜஸ்ப்ரித் பும்ராவ சிலாகிச்சு சொல்லி இருந்ததா.

அதுக்கு மிட்சல் ட்வீட் பண்ணார்: "இது எங்கேந்து வந்துது? இத யார் எழுதினாங்க. இதுல சிலதோட ஒத்துப்போறேன்தான். நா யார் கூடயும் உக்காந்து இப்படி பேட்டி கொடுக்கவே இல்லையே?" அப்பறம் "முதல்ல நா மெல்போர்ன்லயே இல்லையே? இந்த செய்தியாளர் கூட கேள்வி பதில் நிகழ்ச்சின்னு ஒண்ணுத்துக்கு உக்காரவே இல்லியே! முதல் ரெண்டு டெஸ்ட் சமயம் நான் நிறைய ஜர்னலிஸ்ட்கிட்ட பேசினது உண்மைதான். ஆனா எந்த பேட்டிக்கும், ரிகார்டிங்க்கும் நான் அனுமதி தரவே இல்லை. மத்தவங்ககிட்ட காஷுவலா பேசினத இப்படி எழுதினா அதில ப்ரைவசி இஸ்யூ இருக்கு. "

டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா மிட்சல்லுக்கு டிவீட் செஞ்சது. நாங்க அந்த ஆர்டிகிலை 'அன்பப்ளிஷ் செய்யபோறோம். எதாவது இஸ்யூ இருந்தா டிஎம்ல சொல்லுங்க." இது ஞாயித்துக்கிழமை.

இன்னைக்கு சொல்றாங்க. "அப்படி உக்காந்து பேட்டி எடுக்கலதான் . நின்னுகிட்டுதான் பேசினாங்க.  அவரோட கமென்ட்ரிக்கு நடு நடுவே பேசினத அடிப்படையா வெச்சுத்தான் இது எழுதி இருக்கு. மிட்சலோட லேசான நினைவு சக்தியை வலுப்படுத்த தோ பாரு போட்டோ!"

பேட்டின்னா ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு புரிதல் இருக்க வேணாமா? சும்மா பேசிட்டு அத செய்தியா போடலாமா? இங்க வேணா அப்படி நடக்கும். அங்கே எல்லாம் பேட்டின்னா காசு கொடுக்கணும். இல்லை ப்ரீன்னு புரிதல் இருக்கணும் இல்லையா?

வெளங்கிரும்!

Sunday 23 December 2018

இது செய்தி இல்லை

இந்த வலைப்பூ ஆரம்பிச்சதே மீடியால இருக்கற ஏற்றத்தாழ்வை மோசமான ரிபோர்டிங்கை பாத்து கடுப்பாகித்தான்.

இதோ எப்படி ஒரு செய்தியை ப்ரெசண்ட் செய்யக்கூடாது என்கறதுக்கு ஒரு உதாரணம்.

ஒரு விஷயத்தை ரிபோர்ட் செய்யறோம்ன்னா அதப்பத்தி குறைஞ்ச பக்‌ஷ அறிவாவது இருக்கணும். அடுத்து ரிபோர்டர் செய்யற தப்பை காபி எடிட்டர் சரி பார்க்கணும்.

முதல் தப்பு pH என்கிறதை மி.கி பர் லிட்டர்ன்னு ரிபோர்ட் செஞ்சது. இப்பல்லாம் இந்த pH ஹை ஸ்கூல்லேயே வரதே? நாங்கதான் காலேஜ் போய் படிச்சோம். அது வெறும் நம்பர்தானே?

ரெண்டாவது டிஸ்ஸால்வ்ட் ஆக்சிஜன்.

கட்டுரைல சொல்ல வந்த செய்தி என்னவோ நல்ல செய்திதான். கங்கையில் கலக்கிற நீரை சுத்தப்படுத்தறதாலேயும் கான்பூர் மாதிரி இடங்களில தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சரியாக கையாண்டதாலேயும் கங்கை நீர் மாசு வெகுவாக குறைஞ்சு இருக்கு.

நீர் மாசை காட்டற ஒரு விஷயம் அதுல கரைஞ்சு இருக்கற ஆக்சிஜன்.
இது அதிகமா இருந்தா அது நல்லது. நீர் சுத்தமா இருக்குன்னு பொருள்.

இவர் கொடுக்கற டாடா பாருங்க. தலைகீழா இருக்கு. குறையற வேல்யூ நல்ல தண்ணின்னு காட்டறதா சொல்றாங்க.

அந்த பக்கத்தில கமெண்டுக்கு வழி இல்லே!
நம்ம பங்குக்கு அவங்களுக்கு இது பத்தி ரெண்டு நாள் முந்தி ஒரு ட்வீட் போட்டேன். ஒண்ணும் நடக்காது போலிருக்கு.

சுவாரசியமான செய்தி

இது நல்ல செய்தி என்கிற ரீதியில இங்க இடம் பெற முடியாது. பரவாயில்லை, இது சுவாரசியமான செய்தி!
https://is.gd/PSpaWz
மரபு அணுக்கள் நம்மை கட்டுப்படுத்துது. நம்மோட கண்நிறம், தோல் நிறம், முடி நீளமா குட்டையா, சுருட்டையா இல்லையான்னு ஆரம்பிச்சு புற்றுநோய் வர வாய்ப்பு வரை மரபணுக்கள் நிர்ணயிக்கின்றன.
இதோட மாற்று - அதாவது நாம் மரபணுவை நிர்ணயிக்க முடியுமா-  உண்மையா இல்லையான்னு  ஆராய்ச்சி பல நாட்களாக நடக்கின்றது.

இந்த கட்டுரை சொல்வது: ஆமாம். மலேசியாவில் கடலிலேயே வாழும் ஒரு இனத்தவர்களுடைய மரபணு அவர்கள் அதிக நேரம் நீரில் முழுகி இருக்க தோதாக மாறி இருக்கிறது.
கட்டுரையை படிங்க!


Friday 21 December 2018

நல்ல செய்திகள்


நம்ம ஊடகங்கள் எல்லாம் பரபரப்பான செய்திகள்ன்னு ஓடற அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் மனச்சாட்சி குத்தும் போலிருக்கும். அதிகமா பாப்புலரா இல்லாத நல்ல செய்திகளை அவங்க கூட பிரசுரிக்கறாங்க.

https://www.indiatoday.in/good-news

https://timesofindia.indiatimes.com/good-news/india/newslist/48953564.cms
இதான் இன்னைய நல்ல செய்தி! 😬😬

Wednesday 19 December 2018

லடாக்கில் பல்கலைகழகம்.

https://indianexpress.com/article/education/ladakh-to-get-its-first-university-5498293/

லடாக்கில் ஒரு லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கேயே இது வரை ஒரு பல்கலைக்கழகமும் இல்லை.
திங்கட்கிழமை கவர்னர் சத்யபால் மல்லிக் லடாக்கில் முதல் பல்கலைக்கு அனுமதி அளித்துள்ளார். அடுத்த பருவத்தில் இருந்து இயங்க மத்திய அரசு 65 கோடி ரூபாய் வழங்கும்!

Tuesday 18 December 2018

அடுத்த எலன் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவற்றின் நிறுவனர் எலன் மஸ்க். போக்கு வரத்துத்துறையை புரட்டிப்போட்டுக்கொண்டு இருக்கும் தொழிலதிபர். 2016 இல் உலகில் சக்திவாய்ந்த நபர்களில் 21 வது இடத்திலும் உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் 54 ஆம் இடத்திலும் இருந்தவர். இவர் இன்னும் செயலாக இருக்கும் நிலையில் அடுத்த எலன் மஸ்க் ஐ கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார் அமெரிக்க எழுத்தாளரும், தொழிலதிபரும் வாழ்க்கை கல்வி 'குருவும்' ஆன டோனி ராபின்ஸ்.

23 வயதே ஆன ஈஸ்டன் லஷப்பல்தான் அவர்.

இவர் சிறு வயதிலிருந்தே எலக்ட்ரானிக்ஸ் சமாசாரங்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ஆராய்ந்து கொண்டிருந்தவர். கொலராடோ கிராமத்தில் இருந்தபடி யூட்யூப் மூலமும் ஸ்கைபி பாடங்கள் மூலமும் ரோபாடிக்ஸ் அறிவை வளர்த்துக்கொண்டார். 14 வயதில் லெகோ துண்டுகளையும் தூண்டில் கம்பிகளையும் மின் குழாய்களையும் வைத்து முதல் ரொபாடிக் கையை தயாரித்தார்.

16 வயதில் 3 டி ப்ரின்டர் ஒன்று பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. அதை வைத்து ரொபாடிக் கையை ப்ரிண்ட் செய்து காரின் மின் துடைப்பானின் மோட்டாரை கொண்டு இயங்க வைத்துக் காட்டினார். 2012 இல் மாநில சயன்ஸ் போட்டியில் இதை காட்டும்போது ஒரு சிறுமி இதில் அதீத ஆர்வம் காட்டுவதை பார்த்தார். அப்புறம்தான் அவளுக்கு ஒரு கை இல்லை; செயற்கை கையை பொருத்திக்கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது. அந்த கைக்கு அதிக இயக்கம் இல்லை. திறக்கலாம், மூடலாம் அவ்வளவே. அத்துடன் அதன் விலை மிக அதிகம் 80 ஆயிரம் டாலர். அத்துடன் அவள் வளர வளர அது மாற்றப்பட வேண்டும். இதை தெரிந்து கொண்ட லஷப்பல் தன் கருவியை அடுத்த மட்டத்துக்கு கொண்டு போக விரும்பினார்.

பின்னால் இதை உலக அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் வைத்த போது பொறியியல் துறையில் இதற்கு இரண்டாம் இடம் கிடைத்தது. இதனால் இவர் மேலும் உலகளவில் அறியப்பட்டார். பல இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்த அழைக்கப்பட்டார். நாசாவில் 'இன்டர்ன்' ஆக இருக்க அழைப்பு கிடைத்தது.ள்ளை மாளிகைக்கு சென்று ஒபாமாவிடம் கூட இதை காட்டி இருக்கிறார்.

2014 இல் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது ஒரு டெட் எக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் டோனி ராபின்ஸின் கவனத்துக்கு வந்தார். கல்லூரியில் சேரலாமா அல்லது நிறுவனம் ஆரம்பிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவரை டோனி அழைத்து நிறுவனம் துவங்க தான் உதவி செய்வதாக கூறினார்.

2017 இல் முதல் ரோபாடிக் கை மோமோ என்னும் 10 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. அவளது இடது கையை ஸ்கேன் செய்து அப்படியே இட வல மாற்றம் செய்து வலது கையை உருவாக்கினர். 3 டி ப்ரிண்டிங்கில் வண்ண ப்ரிண்டிங் சாத்தியமானதால் அதே தோல் நிறம் கூட கிடைத்துவிட்டது.

இதை எப்படி உபயோகிக்க வேன்டுமென்று நினைக்கக்கூட தேவையில்லையாம். இயல்பாக பயன்படுத்தலாம். எவ்வளவு மென்மையாக பிடிக்கிறது என்றால் முட்டையை எடுத்தாலும் அது உடையாது.
இப்போதைக்கு இது 5-10 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படலாம். இன்னும் குறைக்க முடியுமென்று நம்புகிறார். 500 ஆயிரம் டாலர்கள் திரட்டி 100 பேருக்கு இலவசமாக கொடுக்க முயற்சி நடக்கிறது.
மேலும் விவரமாக படிக்க இங்கே

Monday 17 December 2018

டெஸ்ட்

டெஸ்ட்

நீர் வழி போக்கு வரத்து




ஒரு மாதம் முன் ஹால்தியாவுக்கும் வாரனாசிக்கும் இடையே கங்கையில் நீர் வழி போக்கு வரத்து துவங்கப்பட்டது. ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் உலக வங்கி கடன் Rs 5,369 கோடிகள் உடன் துவக்கிய இந்த திட்டத்தின் பயனாக 1,500-2,000 tonnes எடையுள்ள சிறு கப்பல்கள்/ படகுகள் பயணம் செய்ய முடியும்.
ஒரே மாதத்தில் 80 லட்சம் டன் சரக்கு கையாளப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இலக்கு 280 லட்சம் டன் ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில து சுலபமாக மீறப்படும் வாய்ப்பு இருக்கிறது.
டன்னுக்கு சாலை வழியாக 10 ரூபாயும் ரயில் வழியாக 6 ரூபாயும் ஆகும் செலவு இதில் ஒரு ரூபாய் மட்டுமே ஆகிறது. மேலும் டீசலுக்கு பதில் மெதனால் பயன்படுத்தினால் அரை ரூபாய் மட்டுமே ஆகும் என்கிறார்கள்.போன வாரம் கங்கை நீரை சுத்தப்படுத்தியதை நல்ல செய்தியாக வெளியிட்ட நமக்கு இது நலல்து என்று தோன்றூம் அதே நேரத்தில் இதனால் என்ன சூழல் பாதுகாப்புக்குறைவு நடக்குமோ என்று லேசாக ஒரு அச்சம்!
பரவாயில்லை.

சாதித்த கட்காரி வாழ்க.


https://rightlog.in/2018/12/gadkari-waterways-project-01/

Thursday 13 December 2018

நீர் நிலை மேலாண்மை.


கோவாவில் க்யூபெம் அருகே  மோர்பிர்லா என்னும் பழங்குடி கிராமத்தில் இரண்டு பயிர்கள். பருவ மழை காலத்தில் விவசாயம். மழை விட்டு குளிர்காலத்தில் தோட்டப்பயிர்கள். அங்கிருக்கும் ஏராளமான நீர் அருவிகள் மூலம் இது சாத்தியமாயிற்று. ஆனால் கடந்த சில வருடங்களாக இப்படி இரண்டு பயிர்கள் விளைவிப்பது கடினமாயிற்று. நீர் தட்டுப்பாடே காரணம்.
அங்கே எம்ஈஎஸ் காலேஜின் என்எஸ்எஸ் அலுவலர் அங்கே சென்ற போது நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என கண்டு பிடித்தார். தூர்ந்து போன நீர்நிலைகளை தூர் வார மாணவர்கள் களத்தில் இறங்கைனர். தீபாவளி விடுமுறையில் இவர்கள் அங்கே சென்று தூர் வாருதல், சிறிய செக்டேம்கள் அமைத்தல் போன்ற வேலைகளை செய்தனர். இதன் பயனாக அங்கே இருக்கும் சப்த கோடேஷ்வர் கோவிலின் புனித தீர்த்தத்துக்கும் நீர் வரத்துவங்கியது. இரண்டாம் பருவ பயிரையும் நாங்கள் வளர்க்கலாம் என்று கிராமவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Wednesday 12 December 2018

சோலார்

சோலர் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சமீப காலத்தில் இந்த துறையில் ஏற்பாடு வரும் முன்னேற்றங்கள் ஆச்சரியம் தருபவை.
கொச்சியில் மெட்ரோ நிலையம் சோலார் சக்தியில்தான் இயங்குகிறது. 2670 கிலோ வாட் நிலயத்தை அது ஏற்கெனெவே அமைத்துள்ளது. 2700 கிலோ வாட் நிலயம் இன்னொன்றை மோட்டம் டெப்போவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.  அங்கே எர்ணாகுளத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரி 153 கிலோ வாட் நிலயத்தை அமைக்கவுள்ளது. 10,000 பேர் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிலையம் அமைக்க பதிவு செய்துள்ளார்கள்.
கொச்சி விமான நிலயம் தன் மின் தேவைகளை தானே முழுக்க உற்பத்தி செய்து கொள்ளுகிறது. 13.1 மெகா வாட் நிலயத்தை அது அமைத்துள்ளது.
இத்துறையில் ஈடுபட்டுள்ள வல்லுனர்கள் இன்னும் நிறைய செய்யலாம்; அரசு மிகவும் தாமதப்படுத்துகிறது என்கிறார்களாம்.

Tuesday 11 December 2018

வெற்றிலை பாக்கு


வெற்றிலை பாக்கு கலாசாரம் இந்தியா எங்கும் உண்டு என்றாலும் வட இந்தியாவில் அது மிக அதிகம். அதுவும் கண்ட இடம் காணாத இடம் என்று எல்லா இடங்களிலும் துப்புவது பலருடைய வழக்கம். கயா போன்ற இடங்களில் தெருக்கள் எல்லாமே சிவப்பாகத்தான் இருக்கும்.
மும்பை ரயில்வே மட்டுமே ஒரு நாளுக்கு 60 ஆயிரம் லிட்டர் செலவழித்து இந்த சாயத்தை ரயில்களில் இருந்து கழுவுகிறது. சயான் ஸ்டேஷனில் மட்டும் தினசரி 10 லிட்டர் அமிலம் தேவைப்படுகிறது.
 இந்த நிலையில் மாதுங்காவின் ராம் நாராயண் ருயா கல்லுரி மாணவிகள் எட்டு பேர் இதற்கு சுற்றுப்புற சூழ்லை பாதுக்காக்கும் எளிய சுத்தம் செய்யும் முறையை கண்டு பிடிக்க விழைந்தனர். ஆராய்சிகள் பல செய்து இறுதியில் சில பாக்டீரியாக்கள் என்சைம்கள் கலந்த கலவையை உருவாக்கினர். இது சிவப்பு சாயத்தை நிறமில்லாமல் ஆக்கிவிடுகிறது. பாஸ்டனில் நடந்த ஐஜெம் நிகழ்ச்சியில் இது தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறது.

https://timesofindia.indiatimes.com/city/mumbai/red-letter-day-paan-stain-eraser-wins-students-a-us-award/articleshow/66595571.cms

Monday 10 December 2018

வானில் இந்திய தனியார் செயற்கைகோள்

கடந்த நான்காம் தேதி இந்தியாவின் முதல் தனியார் செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எக்ஸீட் ஸ்பேஸ் என்னும் மும்பை நிறுவனம் தயாரித்த செயற்கை கோளை ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தியது.
செயற்கை கோளை தயாரிக்க தனியாரால் முடியாது என்னும் மாயையை உடைத்து விட்டதாக பெருமை பட்டுக்கொள்ளும் அந்த நிறுவனம் செலவை வெளியே சொல்ல மறுத்துவிட்டது. குறுகிய காலத்தில் முடித்தோம்; மற்ற தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு செலவை விட மிகவும் குறைவு என்று மட்டும் சொல்லி இருக்கிறது.
நாட்டின் 'ஹாம்' ரேடியோ இயக்குவோருக்கு இது பெரும் பயனளிக்கும்.
few minutes after SpaceX Block 5 Falcon 9 rocket lifted off  ..


Friday 7 December 2018

செய்தியில் நல்லது கெட்டது



ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்சி கட்டுகிறார்.

ஊடகங்களில் நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி என்று பிரித்துப் பார்க்க முடியுமா? இது நேற்றைக்கு எழுந்த கேள்வி. முதலில் செய்தி என்ன, யார் பார்வையில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதெல்லாம் அந்த நல்லது அல்லது கெட்டது என்கிற அடைமொழியைத் தீர்மானிக்கின்றன.

ரைட்டு. இதுவும் ஒரு பார்வை. கோபம் நல்லதா கெட்டதா என்றால் இப்போதைய விஞ்ஞானிகள் சொல்லுவது உணர்ச்சிகளில் நல்லது கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது. அவை ஏதோ செய்தி சொல்ல வருகின்றன. அதை புரிந்து கொள்ளப்பாருங்கள்.

ஆனா யதார்த்தமா பார்த்தா கோபம் ஆசை இவை எல்லாம் மோசமான விளைவுகளையே தருவதால் அவை கெட்டது என்றே சொல்லப்படுகின்றன. கோபத்தால் கெட்டுப்போன காரியங்கள் எத்தனை? ஆசைகளால் வீழ்ந்த மாந்தர் எத்தனை! விளைவுகளை ஒட்டியே இவை நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்கப்படுகின்றன.

அதே போல செய்திகளும்.

நமக்கு அவை ஒரு ஊக்கத்தை நம்பிக்கையை கொடுக்கின்றனவா இல்லையா? ஏமாற்றம், சோர்வை கொடுக்கின்றனவா? கோபத்தை தூண்டுகின்றனவா? வெறுப்பை தூண்டுகின்றனவா? நம் மனப்பாங்கையே மாற்றுகின்றனவா?

ஶ்ரீ ரமண பகவானும் சொல்லுகிறார். “நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே! வாசனைகளே சுபம் என்றும் அசுபம் என்றும் இரண்டு விதம். மனம் சுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வசப்பட்டு நிற்கும்போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும்.”

அது போலத்தன் செய்திகளும். என்ன விளைவை உண்டாக்குகின்றன என்பதை பொருத்து. செய்திகள் நம்மில் தூண்டக்கூடியதை வைத்தே அவை நல்லவை கெட்டவை என்று சொல்கிறேன்.
கால்கள் பூமியில் படும் வரை பூமியின் விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.

காப்புரிமைகள்



இந்தியர்கள் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். (இப்போதாவது விழித்துக்கொண்டார்களே!) போர்ப்ஸ் இணைய பத்திரிகை முன் எப்போதையும் விட இப்போது அதிக இந்தியர்கள் காப்புரிமைகளுக்கு (பேடண்ட்ஸ்க்கு) பதிவு செய்கிறார்கள் என்கிறது. https://is.gd/9zPS30

சமீபத்திய யூஎன் அறிக்கைப்படி 50 % அதிகமாக இந்திய காப்புரிமைகள் (பேடண்ட்கள்) பதிவாகி இருக்கின்றன. 8,248 பதிவுகள் 2016 இல். 12,387 பதிவுகள் 2017 இல்.
ஆனால் மொத்த பதிவுகளை ஒப்பிட்டால் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

https://economictimes.indiatimes.com/news/economy/finance/number-of-patents-granted-by-india-shot-up-by-50-in-2017-un/articleshow/66932638.cms

Thursday 6 December 2018

தொலை தூரத்தில் இருந்து ரோபாடிக் அறுவை சிகிச்சை.

முதல் பதிவு ஷேர் உ.பி.த வாசு பாலாஜியிடமிருந்து! தொலை தூரத்தில் இருந்து ரோபாடிக் அறுவை சிகிச்சை.


வணக்கம்




வணக்கம்.
இன்றைய செய்தி ஊடகங்கள் குறித்து உங்களுக்கு திருப்தி இருக்கிறதா? அவர்களது வேலையை சரியாக செய்வதாக நினைக்கிறீர்களா? அவர்களது ரிபோர்டிங் நடுநிலையாக இருப்பதாக நினைக்கிறீர்களா? பார்வை சரியாக இருக்கறதாக நினைக்கிறீர்களா? எல்லா செய்திகளும் இல்லாவிட்டாலும் முக்கால்வாசி செய்திகளாவது பாசிடிவ்வாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஆமாம் என்றால்...
அதிசயபிறவி சார் நீங்க! எங்க கால காட்டுங்க கும்புட்டுக்கறேன். போய் வாங்க சார், இந்த வலைப்பூ உங்களுக்கானது இல்லை.
இல்லைன்னு சொல்றவங்க!
ஏன்னு சொல்ல முடியுமா?
இதுல என்ன பிரச்சினைன்னு சொல்ல முடியுமா?
என்ன செய்யணும்ன்னு சொல்ல முடியுமா?
பின்னூட்டத்தில சொல்லுங்க.
இந்த வலைப்பூவில கொஞ்ச நாளாவது முடிஞ்ச வரை நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ள உத்தேசம். அத்தோட பார்வைகளில என்ன தப்புன்னு சிலது சொல்லவும் உத்தேசம்.
பதிவுகளில நீங்களும் பங்கெடுக்கலாம். ஆரம்பத்தில பதிவுகளை எனக்கு அனுப்புங்க. அவற்றை ஆராய்ந்து வெளியிடுவேன். காலப்போக்கில உங்களை கோ ஆதராக்கூட ஆக்கலாம். யார் கண்டா?

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....