Friday 8 February 2019

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்




முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை. சிரமமாக இருக்கிறது. அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை.
உம்.... திருப்பியும் ஒரு மருத்துவ பதிவு. என்ன செய்ய? எனக்குன்னு வந்து சேருகிறது. இது முன்னே கூகுள் ப்ளசில் போட்டதேதான்.
மருத்துவத்தில் ஒரு பெரிய பிரச்சினை ஆன்டிபயாட்டிக்குகளுக்கு பாக்டீரியா கொஞ்ச நாட்களில் ஒலஒலாட்டி காட்டி விடுவதுதான். ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் என்கிறார்கள். அதாவது பாக்டீரியாக்களில் சில தன்னுள்ளே வரும் மருந்தை வெளியேற்ற கற்றுக்கொள்கின்றன. எப்லக்ஸ் பம்ப் என்னும் வழியில் இது சாத்தியமாகிறது. மற்ற பாக்டீரியாக்கள் அழிந்துவிட இந்த வழியை கற்றுக்கொண்டவை பல்கிப்பெருகி விடுகின்றன. அடுத்து அதே மருந்தை கொடுத்தால் பயனிருப்பதில்லை. பொதுவாக இது உடம்பு சரியாகிவிட்டது என்று ஆன்டிபயாட்டிக்கை ஒரு கோர்ஸாக சாப்பிடாமல் நடுவில் நிறுத்திவிடுவதால் சுலபமாக நடக்கிறது.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூர்கியில் இதற்கு ஒரு தீர்வை 2017 ஆம் வருடம் கண்டு பிடித்தார்கள். "IITR08027" என்னும் மாலிக்யூல் இந்த பம்புக்கு தேவையான ப்ரோட்டன் க்ரேடியன்டை பாதிக்கிறது. இதனால் ஆன்டிபயாடிக் வெளியே பம்ப் ஆவதன் வேகம் வெகுவாக குறைக்கப்படுகிறது. அது வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
முழு கட்டுரை இங்கே

Saturday 2 February 2019

முடாடோ - கான்சர் சிகிச்சை




சுமார் 1.8 கோடி புதிய கான்சர் கேஸ்கள் ஒவ்வொரு வருஷமும் கண்டு பிடிக்கப்படுகின்றன. உலகிலேயே அதிக சாவை உண்டக்கும் நோய்களில் இரண்டாவது இடம் கான்சருக்கே.
இப்படி இருக்கையில் கான்சருக்கான சிகிச்சை முறைகளில் வரும் புதிய முன்னேற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படுவது இயல்பே.
இந்த பதிவுகளில் என் கவனத்துக்கு வரும் நல்ல செய்திகளை பார்க்கையில் இவற்றின் பங்கு அதிகமாகவே இருப்பது போல் இருக்கிறது!
சரி. லேட்டஸ்ட் மல்டி டார்கெட் டாக்சின் எனப்படும் முடாடோ (mu.ta.to)
பாக்டீரியோபாஜ் எனப்படுவது பாக்டீரியாவை தாக்கும் ஒரு 'வைரஸ்'. ஆன்டிபாடி போன்ற ப்ரோடீனுக்கான டிஎன்ஏ கோடிங்கை இதன் மீது பொருத்த முடியும். அப்படி பொருத்தினால் அதன் மீது அந்த ப்ரோடீனே இருப்பது போல ஒரு மாயை தோற்றத்தை உண்டக்க முடியும். இதன் மூலம் மற்ற ப்ரோடீன்கள், டிஎன்ஏ துணுக்குகள் போன்றவை எப்படி கலக்கும் என்பதை ஸ்க்ரீன் செய்ய முடியும்.
2018 இல் ஒரு அறிவியல் குழு இந்த பாஜ் குறித்தான ஆய்வுக்கு நோபல் பரிசை பெற்றது. புதிய ப்ரொடீன்களை உருவாக்கினால் அவை எப்படி நடந்து கொள்ளும் என்பதை ஆராய இந்த குழு ஆராய்ச்சி செய்தது. குறிப்பாக சிகிச்சைக்கான ஆன்டிபாடிகள்.
இதே போல ஆன்டி பாடிகளுக்கு பதிலாக சில பெப்டைட்களை உருவாக்க ஏஈபிஐ முயற்சி செய்தது. அவை இன்னும் சிறியவை, உருவாக்க கொஞ்சம் சுலபம், ஆகவே குறைந்த செலவு. இவர்கள் ஆரம்பத்தில் மற்றவர்கள் போலவே கான்சருக்கான பெப்டைட்களை தயாரிக்க முயன்று கொண்டு இருந்தார்கள். பின் ஆராய்ச்சியின் திசை திரும்பியது. மற்ற கான்சரை கொல்லும் மருந்துகளும் முறைகளும் எப்படி வேலை செய்தன, ஏன் அவை தோல்வியுற்றன அல்லது ஆரம்பத்தில் வேலை செய்து பின் சில நாட்களில் பயனற்று போயின என்று ஆராய்ந்தார்கள். இதற்கு தீர்வையும் கண்டு பிடித்தார்கள்.
கான்சர் செல்களில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தை மருந்துகள் இலக்காக்கின. இதை தாக்கும்போது கான்சரை உண்டு பண்ணும் ஏதோ ஒரு ப்ராசஸ் இருக்கிறதல்லவா? அது பாதிக்கப்பட்டது. அந்த ப்ராசஸ் சரி என்று வேறு பாதையை தேர்ந்தெடுக்கிறது. முன்னே தாக்கிய இலக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை. நான் வேறு இடத்தை உருவாக்கிக்கொள்ளுகிறேன் என்று செயலாற்றியது. விளைவு? மருந்து வேலை செய்வதை நிறுத்தியது. ம்ம்ம் அல்லது அது செய்யும் வேலை இப்ப்போது கான்சர் தன்மையை பாதிக்கவில்லை என்னும் நிலை உருவானது.
முடாடோ என்ன செய்கிறது? அது மற்ற மருந்துகள் போல ஒரு இலக்கை கொண்டு செயல்படவில்லை. மூன்று இலக்குகளையாவது குறி வைத்தது. இதற்கு கான்சர் உருவாக்கும் ப்ராசஸ் ஒரு மாற்றை கண்டு பிடிக்கும் முன் அந்த செல் செத்துவிடும்.

பெரும்பாலான கான்சர் மருந்துகள் வேகமாக வளரும் கான்சர் செல்களை குறிவைக்கின்றன. ஆனால் கான்சர் செல்களின் ஸ்டெம் செல்கள் மெதுவாக வளருபவை. ஆகவே அவை தப்பிக்கின்றன. எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் போது அவை திருப்பியும் கான்சர் செல்களை உற்பத்தி செய்கின்றன. இப்படி திரும்பி வரும் போது அவை மருந்துக்கு பணிவதில்லை, பாதிக்கப்படுவதில்லை. கான்சர் திசுக்களை ஆராய்ந்து அவற்றின் மீது காணப்படும் அதிகப்படி ப்ரோடீன்களை கண்டிபிடித்துவிட்டால் போதும். அவை கான்சர் ஸ்டெம் செல்களிலும் உள்ளன. ஆகவே அவை முடாடோவுக்கு தப்ப முடியாது.
கடைசியாக சில வகை கான்சர் செல்கள் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக் கொள்ளுகின்றன. இதனால் பெரிய மருந்து மாலிக்யூல்கள் செல்லுக்குள் நுழையவே கஷ்டப்படும். ஆனால் முடாடோ மிகச்சிறியவை. 12 பெப்டைட்களே போதும். அத்துடன் வளைந்து கொடுக்கக்கூடியவை. இதனால் இவற்றுக்கு உடல் எந்த ஆன்டிபாடியையும் உருவாக்குவதில்லை.
மருந்துகளைப்போன்ற பக்க விளைவுகள் கிடையாது என்று சொல்ல வேண்டியது இல்லை. கான்சர் செல்கள் தவிர மற்ற செல்கள் பாதிக்கப்படுவதில்லை.
இதன் கிளினிகல் சோதனைகள் விரைவில் துவங்க உள்ளன. சில வருடங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிடலாம்.
முழுமையாக இங்கே படிக்கலாம். கொஞ்சம் அடிப்படை துறை அறிவு தேவையாக இருக்கிறது.

Saturday 26 January 2019

'நிறக்குருடு'



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிற பாடலில் சொல்லியுள்ளபடி நாம் குறைகள் இல்லாமல் பிறந்திருந்தால் நன்றி செலுத்த வேண்டும்.
சிலருக்கு பிறவியிலேயே நிற வேறுபாட்டை அறிய முடியாமல் போகிறது. நிறக்குருடு என்கிறார்கள். புதுசாக இதுக்கு 'இன்னும் சரியாக' என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் நிறக்குருடு என்றே எழுதுகிறேன். blindness ஐ visually challenged என்று சொல்பவர்கள் மன்னிக்க.
இதிலும் பல வகைகள் உள்ளன. சிவப்பு பச்சைக்கு சரியாக வித்தியாசம் பார்க்க முடியாமல் இருப்பது ஒரு வகை. நீலம் மஞ்சள் வித்தியாசம் தெரியாமல் இருப்பது இன்னொரு வகை. இப்படி இன்னும் பல. முழுக்க முழுக்க நிறமே இல்லாமல் கருப்பு வெள்ளையின் சாயல்களாக பார்ப்பது அரிதே.
இன்றைக்குத்தான் இதற்கு ஒரு விசேஷ கண்ணாடி இருப்பது தெரிய வந்தது.
முதலில் இது நிறகுருடு பிரச்சினையை குணப்படுத்தாது. கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று நாம் கண்ணாடி அணியும்போது அவை சரியான பார்வைக்கு ஹேதுவாக இருக்கின்றனவே ஒழிய அதை சரி செய்வதில்லை, இல்லையா?
அது போலத்தான் இதுவும். அணிந்து கொண்டால் அணியாமல் இருப்பதைவிட நல்ல பார்வையை பெறலாம்.
எப்படி வேலை செய்கிறது? உதாரணத்துக்கு பச்சை சிவப்பு பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறங்களை தனித்தனியாக உணராமல் ஒன்றின்மேல் ஒன்று அமைந்ததாக உணர்கிறார்கள் என்பதே அடிப்படையில் பிரச்சினை. இந்த 'ஒவர் லேப்பிங்'கை இது வெட்டி விடுகிறது. 'கூலிங் க்ளாஸ்' போலவே சில நிறப்பிரிகையின் அலைவரிசைகளை வெட்டி விடுகிறது. இதனால் நிறங்களை தனித்தனியாக உணர்கிறார்கள். ஒரு குறை இல்லாதவர் உணர்வது போல இல்லாவிட்டாலும் முன்னே இருந்ததை விட பார்வை நன்றாகவே இருக்கும்.
குறைபாட்டை பொருத்து இது வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம். அதனால் வாங்கும் முன் பத்து நிமிஷத்துக்காவது போட்டு பார்த்து வித்தியாசம் இருந்தால் மட்டுமே வாங்கும் படி பரிந்துரை செய்கிறார்கள்.
வலையில் தேஎடினால் ரூ 8,000 அளவில் இந்தியாவிலேயே கிடைப்பதாக தெரிகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இந்த விடியோவை பாருங்கள்.

கடைசியாக ஒரு புதிர். பிறவிக்குருடருக்கு எல்லாம் கருப்பாக தெரிகிறதா? விடையை பின்னூட்டத்தில் கொடுங்கள்.



Wednesday 23 January 2019

கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.



கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.

உலகில் பல விதமான கான்சர்கள் இருக்கின்றன. ரேடியேஷனில் மாயமாக போகிறவை உண்டு. அறுவை சிகிச்சையில் குணமாகிறவை உண்டு. மருந்து கொடுத்து குணமாகிறவை கூட உண்டு.
இவற்றுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு விட்டேனா பார் என்று சவால் விடும் கான்சர்களும் உண்டு.
இவை எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு. சில சமயம் நோயை விட இந்த பக்க விளைவுகள் கொடுமையானவை என்று தோன்றும். அந்த அளவுக்கு.
கான்சருக்கும் மருந்துகளுக்கும் இருக்கிற உறவு திருடன் போலீஸ் விளையாட்டு போல தொடர் கதையானது.
இன்னொரு வித்தியாசமான வழியையும் கூட சோதித்து இருக்கிறார்கள். ஏன் உடலின் எதிர்ப்பு சக்தி இவற்றை கண்டு பிடித்து அழிப்பதில்லை? உடம்பு இதை சரியாக கண்டுபிடிக்காததே காரணம். அதை கண்டு பிடிக்க வைத்தால்?
இதை இம்யூன் செக் பாய்ண்ட் ப்ளாகேட் என்கிறார்கள். சில பல கான்சர்களுக்கு இவை நல்ல தீர்வாக தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்த முறையும் செயலற்று போகிறது. சினிமாவில் நடிகர் கன்னத்தில் மறு வைத்துக்கொண்டு எதிரிகளை தான் வேறு ஆசாமி என்று நம்ப வைப்பதைப் போல இந்த கான்சர் செல்கள் தன் ஆன்டிஜன்களை உரு மாற்றிக்கொண்டு ஆன்டி பாடிகளை ஏமாற்றிவிடுகின்றன!
சமீபத்திய ஆராய்ச்சி இதற்கும் ஒரு தீர்வை கண்டு பிடித்திருக்கிறது. வேஷம் போட்டுக்கொள்ள உதவும் RNA- வை திருத்தும் என்சைமான ADAR1 ஐ செயலிழக்க வைத்தால் கட்டிகள் மீண்டும் இம்யூன் சிகிச்சைக்கு கரைகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். டெக்னிகலாக இருந்தாலும் பரவாயில்லை படிக்க வேண்டுமென்பவர்களுக்கு
சில வகை நுரையீரல் கான்சர்களுக்கு தோல் கான்சர்களுக்கும் இப்போதைக்கு இது பயன்படுவதாக தெரிகிறது.

Tuesday 22 January 2019

ரயில் பெட்டிகள்








இரண்டு நாட்களுக்கு முன்னே இந்தியாவில் இருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பப்போகிறார்கள் என்று செய்தியை சமூக ஊடகங்களில் பார்த்தேன். முதன்முறையாக என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது.
இல்லையே முன்னேயே நடந்திருக்கிறது போலிருக்கிறதே என்று வலையை தோண்டினால் ஆமாம், முன்னேயே நைஜீரியா தான்ஃஜானியா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, மியான்மார், தைவான், தாய்லாந்த் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
பின்னே இப்போது இது ஏன் அடிபடுகிறது?
வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா இந்த ஆர்டரை கொடுத்து இருக்கிறது.
ப்ரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டம் நிறுவனத்துடன் இந்தியா 'மேக் இன் இண்டியா' திட்டத்தில் ஒப்பந்தம் செய்ததன் பேரில் ஆந்திராவின் சிரி சிடி இல் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. அங்கே சென்னை கொச்சி லக்னோ நகரங்களில் மெட்ரோ சேவைக்கு பெட்டிகள் தயாராகின. 2014 இல் ஆஸ்திரேலிய மெட்ரோவுக்கு ஆர்டர் பெற்று சரியான நேரத்தில் பெட்டிகளை முடித்துக்கொடுத்து இருக்கிறது. அடுத்து கனடாவுக்கும் மும்பையின் மூன்றாம் தடத்துக்கும் குறி வைத்து இருக்கிறது.
இது ஒரிஜினல் இந்திய கம்பனி தயாரிப்பு இல்லைதான். இருந்தாலும் இந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல தொழிற்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவும் அனுபவம் கிடைக்கவும் வாய்ப்பு பெருகி வருகிறது.


Monday 21 January 2019

விவசாயமும் உயர் தொழிற்நுட்பமும்.



தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சொல்லுவது வீ வில் யூஸ் 'டெக்னலாஜி' ஃபார் ப்ராக்ரஸ். மிகவும் பிரச்சினையில் இருக்கும் விவசாயத்துறை இன்னும் அதை அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் உயர் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் விவசாயிகள் பற்றிய செய்தி நல்ல செய்தியாக இருக்கிறது

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த, ராஜகுமாரன் என்ற விவசாயி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களுக்கு தன்னிச்சையாக நீர் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளார்.

இதை தினமலர் விவரமாக வெளியிட்டு இங்கே இருக்கிறது. படித்துப்பாருங்கள்.

Wednesday 16 January 2019

சதுரங்கமும் சென்னையும்



சென்னைக்கும் சதுரங்கத்துக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது. சென்னையிலிருந்து பல சதுரங்க வீரர்கள் வெளிப்பட்டு இருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது மானுவல் ஆரான் என்று கேள்விப்படுவோம். அவர் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டர். இது வரை தமிழ் நாட்டில்
கிராண்ட் மாஸ்டர்  -16
கிராண்ட் மாஸ்டர் (பெண்கள்) -3
இண்டர்நேஷனல் மாஸ்டர் - 30
இண்டர்நேஷனல் மாஸ்டர் (பெண்கள்)  - 12
தோன்றியிருக்கிறார்கள். http://tamilchess.com/tn-gms-ims/

இந்த வரிசையில் இப்போது லேடஸ்ட் குகேஷ். உலக அளவிலேயே இளைய வயதில்  இரண்டாவது கிராண்ட் மாஸ்டர். கடந்த 16 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற போட்டியில் ஜெயித்து இவர் அந்த தகுதியை பெறும்போது வயது 12 வருஷங்கள் 7 மாதங்கள் 17 நாட்கள். இது வரை தமிழ்நாட்டின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் ப்ரஞ்ஞானந்தா.
உலகிலேயே இளைய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி சர்ஜகின் (12 வருஷம் 7மாதம்) 2002 இல் ஏற்படுத்தியசாதனை இன்னும் முறியடிக்கப்படாமலே இருக்கிறது.
மேலும் படிக்க

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....