Friday, 8 February 2019

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்




முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை. சிரமமாக இருக்கிறது. அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை.
உம்.... திருப்பியும் ஒரு மருத்துவ பதிவு. என்ன செய்ய? எனக்குன்னு வந்து சேருகிறது. இது முன்னே கூகுள் ப்ளசில் போட்டதேதான்.
மருத்துவத்தில் ஒரு பெரிய பிரச்சினை ஆன்டிபயாட்டிக்குகளுக்கு பாக்டீரியா கொஞ்ச நாட்களில் ஒலஒலாட்டி காட்டி விடுவதுதான். ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் என்கிறார்கள். அதாவது பாக்டீரியாக்களில் சில தன்னுள்ளே வரும் மருந்தை வெளியேற்ற கற்றுக்கொள்கின்றன. எப்லக்ஸ் பம்ப் என்னும் வழியில் இது சாத்தியமாகிறது. மற்ற பாக்டீரியாக்கள் அழிந்துவிட இந்த வழியை கற்றுக்கொண்டவை பல்கிப்பெருகி விடுகின்றன. அடுத்து அதே மருந்தை கொடுத்தால் பயனிருப்பதில்லை. பொதுவாக இது உடம்பு சரியாகிவிட்டது என்று ஆன்டிபயாட்டிக்கை ஒரு கோர்ஸாக சாப்பிடாமல் நடுவில் நிறுத்திவிடுவதால் சுலபமாக நடக்கிறது.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூர்கியில் இதற்கு ஒரு தீர்வை 2017 ஆம் வருடம் கண்டு பிடித்தார்கள். "IITR08027" என்னும் மாலிக்யூல் இந்த பம்புக்கு தேவையான ப்ரோட்டன் க்ரேடியன்டை பாதிக்கிறது. இதனால் ஆன்டிபயாடிக் வெளியே பம்ப் ஆவதன் வேகம் வெகுவாக குறைக்கப்படுகிறது. அது வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
முழு கட்டுரை இங்கே

Saturday, 2 February 2019

முடாடோ - கான்சர் சிகிச்சை




சுமார் 1.8 கோடி புதிய கான்சர் கேஸ்கள் ஒவ்வொரு வருஷமும் கண்டு பிடிக்கப்படுகின்றன. உலகிலேயே அதிக சாவை உண்டக்கும் நோய்களில் இரண்டாவது இடம் கான்சருக்கே.
இப்படி இருக்கையில் கான்சருக்கான சிகிச்சை முறைகளில் வரும் புதிய முன்னேற்றங்கள் கூர்ந்து கவனிக்கப்படுவது இயல்பே.
இந்த பதிவுகளில் என் கவனத்துக்கு வரும் நல்ல செய்திகளை பார்க்கையில் இவற்றின் பங்கு அதிகமாகவே இருப்பது போல் இருக்கிறது!
சரி. லேட்டஸ்ட் மல்டி டார்கெட் டாக்சின் எனப்படும் முடாடோ (mu.ta.to)
பாக்டீரியோபாஜ் எனப்படுவது பாக்டீரியாவை தாக்கும் ஒரு 'வைரஸ்'. ஆன்டிபாடி போன்ற ப்ரோடீனுக்கான டிஎன்ஏ கோடிங்கை இதன் மீது பொருத்த முடியும். அப்படி பொருத்தினால் அதன் மீது அந்த ப்ரோடீனே இருப்பது போல ஒரு மாயை தோற்றத்தை உண்டக்க முடியும். இதன் மூலம் மற்ற ப்ரோடீன்கள், டிஎன்ஏ துணுக்குகள் போன்றவை எப்படி கலக்கும் என்பதை ஸ்க்ரீன் செய்ய முடியும்.
2018 இல் ஒரு அறிவியல் குழு இந்த பாஜ் குறித்தான ஆய்வுக்கு நோபல் பரிசை பெற்றது. புதிய ப்ரொடீன்களை உருவாக்கினால் அவை எப்படி நடந்து கொள்ளும் என்பதை ஆராய இந்த குழு ஆராய்ச்சி செய்தது. குறிப்பாக சிகிச்சைக்கான ஆன்டிபாடிகள்.
இதே போல ஆன்டி பாடிகளுக்கு பதிலாக சில பெப்டைட்களை உருவாக்க ஏஈபிஐ முயற்சி செய்தது. அவை இன்னும் சிறியவை, உருவாக்க கொஞ்சம் சுலபம், ஆகவே குறைந்த செலவு. இவர்கள் ஆரம்பத்தில் மற்றவர்கள் போலவே கான்சருக்கான பெப்டைட்களை தயாரிக்க முயன்று கொண்டு இருந்தார்கள். பின் ஆராய்ச்சியின் திசை திரும்பியது. மற்ற கான்சரை கொல்லும் மருந்துகளும் முறைகளும் எப்படி வேலை செய்தன, ஏன் அவை தோல்வியுற்றன அல்லது ஆரம்பத்தில் வேலை செய்து பின் சில நாட்களில் பயனற்று போயின என்று ஆராய்ந்தார்கள். இதற்கு தீர்வையும் கண்டு பிடித்தார்கள்.
கான்சர் செல்களில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தை மருந்துகள் இலக்காக்கின. இதை தாக்கும்போது கான்சரை உண்டு பண்ணும் ஏதோ ஒரு ப்ராசஸ் இருக்கிறதல்லவா? அது பாதிக்கப்பட்டது. அந்த ப்ராசஸ் சரி என்று வேறு பாதையை தேர்ந்தெடுக்கிறது. முன்னே தாக்கிய இலக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை. நான் வேறு இடத்தை உருவாக்கிக்கொள்ளுகிறேன் என்று செயலாற்றியது. விளைவு? மருந்து வேலை செய்வதை நிறுத்தியது. ம்ம்ம் அல்லது அது செய்யும் வேலை இப்ப்போது கான்சர் தன்மையை பாதிக்கவில்லை என்னும் நிலை உருவானது.
முடாடோ என்ன செய்கிறது? அது மற்ற மருந்துகள் போல ஒரு இலக்கை கொண்டு செயல்படவில்லை. மூன்று இலக்குகளையாவது குறி வைத்தது. இதற்கு கான்சர் உருவாக்கும் ப்ராசஸ் ஒரு மாற்றை கண்டு பிடிக்கும் முன் அந்த செல் செத்துவிடும்.

பெரும்பாலான கான்சர் மருந்துகள் வேகமாக வளரும் கான்சர் செல்களை குறிவைக்கின்றன. ஆனால் கான்சர் செல்களின் ஸ்டெம் செல்கள் மெதுவாக வளருபவை. ஆகவே அவை தப்பிக்கின்றன. எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் போது அவை திருப்பியும் கான்சர் செல்களை உற்பத்தி செய்கின்றன. இப்படி திரும்பி வரும் போது அவை மருந்துக்கு பணிவதில்லை, பாதிக்கப்படுவதில்லை. கான்சர் திசுக்களை ஆராய்ந்து அவற்றின் மீது காணப்படும் அதிகப்படி ப்ரோடீன்களை கண்டிபிடித்துவிட்டால் போதும். அவை கான்சர் ஸ்டெம் செல்களிலும் உள்ளன. ஆகவே அவை முடாடோவுக்கு தப்ப முடியாது.
கடைசியாக சில வகை கான்சர் செல்கள் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கிக் கொள்ளுகின்றன. இதனால் பெரிய மருந்து மாலிக்யூல்கள் செல்லுக்குள் நுழையவே கஷ்டப்படும். ஆனால் முடாடோ மிகச்சிறியவை. 12 பெப்டைட்களே போதும். அத்துடன் வளைந்து கொடுக்கக்கூடியவை. இதனால் இவற்றுக்கு உடல் எந்த ஆன்டிபாடியையும் உருவாக்குவதில்லை.
மருந்துகளைப்போன்ற பக்க விளைவுகள் கிடையாது என்று சொல்ல வேண்டியது இல்லை. கான்சர் செல்கள் தவிர மற்ற செல்கள் பாதிக்கப்படுவதில்லை.
இதன் கிளினிகல் சோதனைகள் விரைவில் துவங்க உள்ளன. சில வருடங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிடலாம்.
முழுமையாக இங்கே படிக்கலாம். கொஞ்சம் அடிப்படை துறை அறிவு தேவையாக இருக்கிறது.

Saturday, 26 January 2019

'நிறக்குருடு'



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிற பாடலில் சொல்லியுள்ளபடி நாம் குறைகள் இல்லாமல் பிறந்திருந்தால் நன்றி செலுத்த வேண்டும்.
சிலருக்கு பிறவியிலேயே நிற வேறுபாட்டை அறிய முடியாமல் போகிறது. நிறக்குருடு என்கிறார்கள். புதுசாக இதுக்கு 'இன்னும் சரியாக' என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் நிறக்குருடு என்றே எழுதுகிறேன். blindness ஐ visually challenged என்று சொல்பவர்கள் மன்னிக்க.
இதிலும் பல வகைகள் உள்ளன. சிவப்பு பச்சைக்கு சரியாக வித்தியாசம் பார்க்க முடியாமல் இருப்பது ஒரு வகை. நீலம் மஞ்சள் வித்தியாசம் தெரியாமல் இருப்பது இன்னொரு வகை. இப்படி இன்னும் பல. முழுக்க முழுக்க நிறமே இல்லாமல் கருப்பு வெள்ளையின் சாயல்களாக பார்ப்பது அரிதே.
இன்றைக்குத்தான் இதற்கு ஒரு விசேஷ கண்ணாடி இருப்பது தெரிய வந்தது.
முதலில் இது நிறகுருடு பிரச்சினையை குணப்படுத்தாது. கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று நாம் கண்ணாடி அணியும்போது அவை சரியான பார்வைக்கு ஹேதுவாக இருக்கின்றனவே ஒழிய அதை சரி செய்வதில்லை, இல்லையா?
அது போலத்தான் இதுவும். அணிந்து கொண்டால் அணியாமல் இருப்பதைவிட நல்ல பார்வையை பெறலாம்.
எப்படி வேலை செய்கிறது? உதாரணத்துக்கு பச்சை சிவப்பு பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறங்களை தனித்தனியாக உணராமல் ஒன்றின்மேல் ஒன்று அமைந்ததாக உணர்கிறார்கள் என்பதே அடிப்படையில் பிரச்சினை. இந்த 'ஒவர் லேப்பிங்'கை இது வெட்டி விடுகிறது. 'கூலிங் க்ளாஸ்' போலவே சில நிறப்பிரிகையின் அலைவரிசைகளை வெட்டி விடுகிறது. இதனால் நிறங்களை தனித்தனியாக உணர்கிறார்கள். ஒரு குறை இல்லாதவர் உணர்வது போல இல்லாவிட்டாலும் முன்னே இருந்ததை விட பார்வை நன்றாகவே இருக்கும்.
குறைபாட்டை பொருத்து இது வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம். அதனால் வாங்கும் முன் பத்து நிமிஷத்துக்காவது போட்டு பார்த்து வித்தியாசம் இருந்தால் மட்டுமே வாங்கும் படி பரிந்துரை செய்கிறார்கள்.
வலையில் தேஎடினால் ரூ 8,000 அளவில் இந்தியாவிலேயே கிடைப்பதாக தெரிகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இந்த விடியோவை பாருங்கள்.

கடைசியாக ஒரு புதிர். பிறவிக்குருடருக்கு எல்லாம் கருப்பாக தெரிகிறதா? விடையை பின்னூட்டத்தில் கொடுங்கள்.



Wednesday, 23 January 2019

கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.



கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.

உலகில் பல விதமான கான்சர்கள் இருக்கின்றன. ரேடியேஷனில் மாயமாக போகிறவை உண்டு. அறுவை சிகிச்சையில் குணமாகிறவை உண்டு. மருந்து கொடுத்து குணமாகிறவை கூட உண்டு.
இவற்றுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு விட்டேனா பார் என்று சவால் விடும் கான்சர்களும் உண்டு.
இவை எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு. சில சமயம் நோயை விட இந்த பக்க விளைவுகள் கொடுமையானவை என்று தோன்றும். அந்த அளவுக்கு.
கான்சருக்கும் மருந்துகளுக்கும் இருக்கிற உறவு திருடன் போலீஸ் விளையாட்டு போல தொடர் கதையானது.
இன்னொரு வித்தியாசமான வழியையும் கூட சோதித்து இருக்கிறார்கள். ஏன் உடலின் எதிர்ப்பு சக்தி இவற்றை கண்டு பிடித்து அழிப்பதில்லை? உடம்பு இதை சரியாக கண்டுபிடிக்காததே காரணம். அதை கண்டு பிடிக்க வைத்தால்?
இதை இம்யூன் செக் பாய்ண்ட் ப்ளாகேட் என்கிறார்கள். சில பல கான்சர்களுக்கு இவை நல்ல தீர்வாக தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்த முறையும் செயலற்று போகிறது. சினிமாவில் நடிகர் கன்னத்தில் மறு வைத்துக்கொண்டு எதிரிகளை தான் வேறு ஆசாமி என்று நம்ப வைப்பதைப் போல இந்த கான்சர் செல்கள் தன் ஆன்டிஜன்களை உரு மாற்றிக்கொண்டு ஆன்டி பாடிகளை ஏமாற்றிவிடுகின்றன!
சமீபத்திய ஆராய்ச்சி இதற்கும் ஒரு தீர்வை கண்டு பிடித்திருக்கிறது. வேஷம் போட்டுக்கொள்ள உதவும் RNA- வை திருத்தும் என்சைமான ADAR1 ஐ செயலிழக்க வைத்தால் கட்டிகள் மீண்டும் இம்யூன் சிகிச்சைக்கு கரைகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். டெக்னிகலாக இருந்தாலும் பரவாயில்லை படிக்க வேண்டுமென்பவர்களுக்கு
சில வகை நுரையீரல் கான்சர்களுக்கு தோல் கான்சர்களுக்கும் இப்போதைக்கு இது பயன்படுவதாக தெரிகிறது.

Tuesday, 22 January 2019

ரயில் பெட்டிகள்








இரண்டு நாட்களுக்கு முன்னே இந்தியாவில் இருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பப்போகிறார்கள் என்று செய்தியை சமூக ஊடகங்களில் பார்த்தேன். முதன்முறையாக என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது.
இல்லையே முன்னேயே நடந்திருக்கிறது போலிருக்கிறதே என்று வலையை தோண்டினால் ஆமாம், முன்னேயே நைஜீரியா தான்ஃஜானியா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, மியான்மார், தைவான், தாய்லாந்த் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
பின்னே இப்போது இது ஏன் அடிபடுகிறது?
வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா இந்த ஆர்டரை கொடுத்து இருக்கிறது.
ப்ரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டம் நிறுவனத்துடன் இந்தியா 'மேக் இன் இண்டியா' திட்டத்தில் ஒப்பந்தம் செய்ததன் பேரில் ஆந்திராவின் சிரி சிடி இல் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. அங்கே சென்னை கொச்சி லக்னோ நகரங்களில் மெட்ரோ சேவைக்கு பெட்டிகள் தயாராகின. 2014 இல் ஆஸ்திரேலிய மெட்ரோவுக்கு ஆர்டர் பெற்று சரியான நேரத்தில் பெட்டிகளை முடித்துக்கொடுத்து இருக்கிறது. அடுத்து கனடாவுக்கும் மும்பையின் மூன்றாம் தடத்துக்கும் குறி வைத்து இருக்கிறது.
இது ஒரிஜினல் இந்திய கம்பனி தயாரிப்பு இல்லைதான். இருந்தாலும் இந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல தொழிற்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவும் அனுபவம் கிடைக்கவும் வாய்ப்பு பெருகி வருகிறது.


Monday, 21 January 2019

விவசாயமும் உயர் தொழிற்நுட்பமும்.



தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சொல்லுவது வீ வில் யூஸ் 'டெக்னலாஜி' ஃபார் ப்ராக்ரஸ். மிகவும் பிரச்சினையில் இருக்கும் விவசாயத்துறை இன்னும் அதை அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் உயர் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் விவசாயிகள் பற்றிய செய்தி நல்ல செய்தியாக இருக்கிறது

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த, ராஜகுமாரன் என்ற விவசாயி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களுக்கு தன்னிச்சையாக நீர் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளார்.

இதை தினமலர் விவரமாக வெளியிட்டு இங்கே இருக்கிறது. படித்துப்பாருங்கள்.

Wednesday, 16 January 2019

சதுரங்கமும் சென்னையும்



சென்னைக்கும் சதுரங்கத்துக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது. சென்னையிலிருந்து பல சதுரங்க வீரர்கள் வெளிப்பட்டு இருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது மானுவல் ஆரான் என்று கேள்விப்படுவோம். அவர் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டர். இது வரை தமிழ் நாட்டில்
கிராண்ட் மாஸ்டர்  -16
கிராண்ட் மாஸ்டர் (பெண்கள்) -3
இண்டர்நேஷனல் மாஸ்டர் - 30
இண்டர்நேஷனல் மாஸ்டர் (பெண்கள்)  - 12
தோன்றியிருக்கிறார்கள். http://tamilchess.com/tn-gms-ims/

இந்த வரிசையில் இப்போது லேடஸ்ட் குகேஷ். உலக அளவிலேயே இளைய வயதில்  இரண்டாவது கிராண்ட் மாஸ்டர். கடந்த 16 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற போட்டியில் ஜெயித்து இவர் அந்த தகுதியை பெறும்போது வயது 12 வருஷங்கள் 7 மாதங்கள் 17 நாட்கள். இது வரை தமிழ்நாட்டின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் ப்ரஞ்ஞானந்தா.
உலகிலேயே இளைய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி சர்ஜகின் (12 வருஷம் 7மாதம்) 2002 இல் ஏற்படுத்தியசாதனை இன்னும் முறியடிக்கப்படாமலே இருக்கிறது.
மேலும் படிக்க

Saturday, 12 January 2019

நல்ல செய்திகள்


நல்ல செய்திகள் ஆங்கில இணைய தளம்.
https://www.goodnewsnetwork.org/
இப்படி ஒரு இணைய தளம் இருக்கிறது. இன்னும் விவரமாக பார்க்கவில்லை; ஆனால் இந்த கான்சப்டே போதாதா?
சூடிக்கொடுத்தவர் ஆண்டாள்.
சுட்டி கொடுத்தவர் நண்பர் க்ருஷ்ணமூர்த்தி.எஸ். 
நன்றி!

Friday, 11 January 2019

நெகிழி கழிவு



தார் ரோடு போடும்போது கூடவே நெகிழி கழிவுகளை சேர்த்து போட்டால் ரோடு அதிக வருஷங்கள் உழைக்கிறது என்று பல வருஷங்களுக்கு முன்பே மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஶ்ரீ வாசுதேவன் கண்டுபிடித்தார். இந்த முறை சென்னை ஐஐடியிலும் நடைமுறைபடுத்தி காட்டப்பட்டு இருக்கிறது.

நமக்கு தோன்றலாம், அட இது அருமையாக இருக்கிறதே? ஒரு பக்கம் நெகிழி கழிவுகளை அகற்றலாம், இன்னொரு பக்கம் தார் ரோடுகள் நீண்ட நாள் உழைக்கும். இது வின் வின் சிச்சுவேஷன்!
உணமையில் அப்படித்தான் போட வேண்டும் என்று விதி முறை கூட இருக்கிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் நிச்சயமாக நடைமுறையில் இல்லை. ஏன்?

ரோடுகள் அடிக்கடி பழுதாவதிலும் அடிக்கடி டெண்டர் விட்டு காண்ட்ராக்ட் கொடுப்பதிலும் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அதனால்தான் இது நடக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஒரு வழியாக அரசு நெகிழி கழிவை பிரச்சினை என்று ஒத்துக்கொண்டு 14(?) வகை நெகிழி தயாரிப்புகளை தடை செய்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழியை என்ன செய்வது என்பது பிரச்சினையாக உருவெடுக்கும் போலிருக்கிறது.
பிரதமர் திட்டத்தில் கழிவறைகளை கட்ட இவற்றை பயன்படுத்தி உருவாக்கிய ப்ளாஸ்டோன் என்னும் கற்களை பயன்படுத்தலாம் என்கிறார் அதே பேராசிரியர்.

மேலும் விவரங்களுக்கு

https://tamil.thehindu.com/tamilnadu/article25966934.ece

Thursday, 10 January 2019

ஆல்ஃபா கதிர் சிகிச்சை




பல்கலை பாலிடிக்ஸும் அரசு இயந்திர மெத்தனமும் 70% நோயாளிகளில் கான்சர் செலகளை அழிக்கும் ஒரு இஸ்ரேல் தொழிற்நுட்பத்தை ஏறத்தாழ கிடைக்காமல் செய்துவிட்டது.
டெல் அவைவ் பலகலை பேராசிரியர்கள் யோனா கெய்சாரி, இட்ஷக் கெல்சன் ஆகியோர் ஆல்ஃபா கதிர்களால் கான்சர் செல்களை அழிக்க விழைந்தனர். இந்த கதிர் கான்சர் செல் டிஎன்ஏவின் இரு இழைகளையும் உடைத்துவிடும். ஆனால் சுற்றியுள்ள நல்ல செல்களை அழிக்காது. பிரச்சினை ஆல்ஃபா கதிர்கள் 50 மைக்ரான் (1/20 மிமீ) அளவே ஊடுருவும்.

பீட்டா, காம்மா கதிர்கள் அதிகம் ஊடுருவுமானாலும் அவை ஒரு டிஎன்ஏ இழையை மட்டுமே உடைக்கும். சமயத்தில் செல் மீண்டும் உயிர்த்துவிடும். இக்கதிர்கள் பக்க விளைவுகளை அதிகமாக உருவாக்குவதுடன் நல்ல செல்களையும் பதம் பார்த்துவிடும்.

ஒரு 5 செ.மீ அளவு உள்ள கட்டிக்கு நூறாயிர கணக்கான கதிர்கள் தேவைப்படும். ரேடியம் 224 என்னும் ஐஸோடோப்பை கொடுக்கையில் அது கட்டிக்குள் ஊடுருவி விடுவிக்கும் அணுக்கள் 3 மிமீ வரை ஊடுருவும் கதிர்களை விடுவிக்கின்றன. மேலும் இது இம்யூன் சிஸ்டத்தை தூண்டிவிட்டு கான்சர் செல்களை அடையாளம் கண்டு அழிக்க தூண்டும்.

மேலும் ஆராய்ச்சி தேவைப்பட்ட நிலையில் இதன் காப்புரிமை பதிவு செய்யப்பட்டதில் தகராறு ஏற்பட்டு சிக்கலாகிவிட்டது. இந்த சிக்கலை விடுவிக்க யூஃஜி ஸோபர் என்பவர் 2015 இல் நியமிக்கப்பட்டார். இவர் புதிய நிறுவனம் ஒன்றை துவக்கி சிக்கலை தீர்த்ததுடன் மேலும் ஆராய்ச்சிக்கு நிதி உதவியும் தேடிக்கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க https://is.gd/5WeZzF

Tuesday, 8 January 2019

வெற்றிக்கதை

சினிமாத்தனமா அப்பப்ப சில வெற்றிக்கதைகள் செய்திகளில வரும். ஒரே ஒரு பாட்டில சாதா ஆள் பால் வியாபார கிங் ஆ ஆகறது சினிமால மட்டும்தான் நடக்கும். நிஜ வாழ்கையில் இவரப்போல உழைச்சு மேல வரவங்கதான்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கிராமத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளியின் மகனான பாபுராவால் படிப்பதற்கு புத்தகம் வாங்க இயலாத நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைதேடி ஹைதராபாத் வந்தார்.

அவருக்கு இந்த டீ கடையை கூட்டிப்பெருக்கும் வேலைதான் கிடைத்தது சரி என்று அந்த வேலையை ஆனந்தமாக செய்தார் இரவில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் துாங்கிக்கொள்வார்.

சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு பெற்றார் ஒரு நெருக்கடி காரணமாக இந்த கடையை நடத்த முடியாத முதலாளி கடையை பாபுராவிடம் விற்றுவிட்டார்.பாபுராவ் கடைக்கு பொறுப்பு ஏற்றபிறகு வெறும் டீ மட்டும் கொடுக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பிஸ்கட்டும் தயாரித்துக் கொடுத்தார்....
முழுக்க படிக்க:  

https://www.dinamalar.com/news_detail.asp?id=2182557

Sunday, 6 January 2019

நெகிழி மாற்று



நெகிழி நாளுக்கு நாள் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு அதை பயன்படுத்தும் 10 பொருட்களை தடை செய்து விட்டது. மாற்று குறித்து நாம் குழம்பி வரும் வேளையில் ஒரு நல்ல மாற்று வரும் போலிருக்கிறது. முன்னேயே இதம் சாத்தியங்களை கேட்டு இருக்கிறேன். இப்போது இந்தோனேஷியாவில் ஒருவர் உண்மையாகவே கடல் பாசியிலிருந்து மாற்றுப்பொருளை தயாரிக்கிறார்.
விடியோவை பாருங்கள்.

https://twitter.com/BBC/status/1049326804555759616

https://twitter.com/BBC/status/1049326804555759616

பீனோ ஃஜெபின்

25 வயது பீனோ ஃஜெபீன். சென்னையை சேர்ந்த இவர் 100% பார்வையை இழந்தவர்.
2015 இல் இவர் ஐஎஃப்எஸ் துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் முற்றிலும் பார்வை இழந்த பெண்மணி ஆனார். இதற்காக அரசு விதி முறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அவற்றை முறையே செய்து இவருக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ரெய்ல் புத்தகங்களைத்தான் பெரும்பாலும் பார்வை இழந்தவர்கள் நம்பி இருப்பார்கள். அதாவது ஒரு புத்தகம் அந்த முறையில் வெளியிடப்பட்டாலே ஒழிய இவர்களால் அதை படிக்க முடியாது. பிறர் படித்து காட்ட வேன்டி இருக்கும். இவர் கணினி திரையில் தெரிவதை படித்துக்காட்டும் மென்பொருள் ஒன்றை பயன்படுத்த்னார். அதனால் பலவற்றையும் படிக்க முடிந்தது.
உசாத்துணை : https://thelogicalindian.com/?p=6366

செய்தி தகவல் ஶ்ரீ வாசு பாலாஜி.

Wednesday, 2 January 2019

மல்டிபில் மயலோமா


'கான்சர்'
சில பல வருடங்களுக்கு முன் சினிமாக்களில் கதாநாயகன்/ நாயகிக்கு வரும் மோசமான 'அபிமான' நோய் 'ப்ளட் கான்சர்'.
இவற்றிலேயே இரண்டாவதாக பெரும்பாலானோரை பாதிக்கும் நோய்  'மல்டிபில் மயலோமா', எலும்பு மஜ்ஜையில் ரத்தத்தின் எதிர்ப்பு சக்தி என்று நாம் சொல்லும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் 'ப்ளாஸ்மா' செல்களின் கட்டுப்பாடில்லாத வளர்ச்சி இதை உண்டு பண்ணுகிறது.
ஒவ்வொரு நோயாளியும் தனித்தன்மை வாய்ந்து இருப்பதால்  இதை ஆரம்ப காலகட்டத்தில் சோதனை மூலம் கண்டு பிடித்தல் கடினம். அத்துடன் இவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று நிர்ணயிப்பதும் கடினம்.
செயற்கை நுண்ணறிவு இதற்கு இப்போது கை கொடுக்கிறது.
இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயந்திரத்தை கற்க வைப்பதன் மூலம் இந்த செல்களை வகைப்படுத்துதலை எளிதாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட மனிதர்கள் இடையே இந்த செல்கள் வெவ்வேறு மாதிரி இருந்தாலும் ஒரே நபரின் ரத்தத்தில் ஒரே மாதிரிதான் இருக்கும். மயலோமா இருந்தால் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஆகவே இந்த இயந்திரம் ஆராய்ந்து செல்களின் உருவத்தை கற்று அவை வெவ்வேறு மாதிரியாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடும். பல்லாயிரம் செல்களில் சில இப்படி இருந்தாலும் கூட கண்டு பிடித்துவிடும்.


https://is.gd/Ozlq3B

Wednesday, 26 December 2018

வாடிக்கையாளர் சேவைகள்


சில வருஷங்களுக்கு முன் கூட மக்களுடைய பொதுவான புகார் ஒண்ணு உண்டு. கம்பெனி சர்வீஸ் சரியில்லை. கூடா எடுக்கறதில்லை; எடுத்தா புகாரை சரியா பதிவு செய்யறதில்லை; பதிவு செய்யறாங்களோ இல்லையோ ரெஃபரன்ஸ் நம்பர் தரதில்லை. பாலோ அப் இல்லை. திருப்பி திருப்பி புகார் செய்ய வேன்டி இருக்கு.
 இது எவ்வளவு தூரம் எதிர்மரை எண்ணங்களை வளர்ட்ய்து இருக்குன்னா பலரும் பிரச்சினை வந்தால் அது ரொம்ப விலை அதிகமானதா இருந்தால் ஒழிய இந்த வழியை நாடறதில்லை. ஒழியறதுன்னு விட்டுவிட்டு புதுசா வாங்கிடுவாங்க.

ஆனா சமீப காலமாக இதெல்லாம் முன்னேற்றம் கண்டு இருக்கு.

இன்னைக்கு என் உ.பி.த வாசு பாலாஜி ஷேர் செய்த விஷயம்.
--
நல்ல விஷயம்.

ஓரியண்ட்ல கப்லட்னு ஒரு ஃபேன் 4 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. 2 ப்ளேட் யிங் யாங் கான்ஸப்ட். ஒரு ஃபேன் கொஞ்ச நாளா கொட கொடன்னு சவுண்ட். பார்த்தா ஒரு ப்ளேட்ல ரிவட் அடிச்ச இடம் உடைஞ்சிருக்கு. பாரீஸ் கார்னர்ல நார்மல் ஃபேன்னா ஸ்வீப் சைசுக்கு டூப்ளிகேட் கிடைக்கும். ஆனா சமயத்துல ப்ளேட் வெயிட்ல வித்தியாசம் வந்து லக்குவான் அடிச்ச மாடு மாதிரி ஒரு பக்கமா இழுக்கும். இதுல கப்லெட் ப்ளேட் கிடைக்குமான்னு டவுட்டு.

சரி எதுக்கும் பார்ப்போம்னு ஓரியண்ட் சைட்ல போய் ஈகாம் சர்வீசுக்கு ஒரு மெயிலுட்டேன். மெயில் செண்ட் மெசேஜ் மறையறதுக்குள்ள ரிப்ளை. சர்தான்..ஆடோ ரிப்ளையா இருக்கும்னு நினைச்சுண்டு ஓப்பன் பண்ணா, அய்யோ ரொம்ப சாரி..உங்க அட்ரஸ், காண்டாக்ட் நம்பர் குடுங்க பார்க்கறோம்னு மெயில் வந்திச்சு.

ம்க்கும்..என்னாத்த நீ பாக்கறது..நான் என்ன கேட்டேன். இந்த மாதிரி ப்ளேட் உடைஞ்சு போச்சு. ப்ரவுன் அண்ட் வைட். புது ப்ளேட் ஒரு செட் வேணும். எங்க கிடைக்கும்னுதானன்னு நினைச்சிண்டே டீடெயில் மெயில் பண்ணேன்.

அடுத்த நிமிஷம் ஒரு எஸ் எம் எஸ் வந்துச்சு. கம்ப்ளெயிண்ட் நம்பர் இது. எங்க சர்வீஸ் ஆள் ஃபோன் பண்ணுவான்னு. கொஞ்ச நேரத்துல லோகல் நம்பர்லருந்து ஒரு எஸ் எம் எஸ். இந்த கம்ப்ளெயிண்ட் நம்பர் வந்திருக்கு. கூடிய சீக்கிரம் ஆள் வரும்னு. இதெல்லாம் திங்கள் கிழமை.

நேத்து கார்த்தால கர்கோனுலருந்து ஃபோன். நீ கம்ப்ளெயிண்ட் குடுத்தியே..ஃபோன் வந்திச்சானு கேட்டான். இல்ல. கம்ப்ளெயிண்ட் நம்பர் வந்துச்சு. எங்காளு வருவான்னு ஒரு எஸ் எம் எஸ் வந்துச்சு அவ்ளோதான்னேன். அய்யோ ரொம்ப சாரி. இன்னைக்குள்ள ஆள் வருவான். நான் என்ஷூர் பண்ணிக்கறேன்னான். கொஞ்ச நிமிஷத்துல இன்னோரு ஹிந்திக்காரன், சார் கம்ப்ளெயிண்ட் பண்ணீங்களா. இன்னைக்குள்ள ஆள் வருவான் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னான். இதென்னடா அநியாயத்துக்கு செல்லம் கொஞ்சுறானுவன்னு நினைச்சிண்டே இருந்தா வீட்லருந்து ஃபோன். சர்வீஸ் ஆள் வந்து பார்த்துட்டு சார் இது ஓல்ட் மாடல் சார்னான். இப்ப கூட ஓரியண்ட் சைட்ல இருக்கு. ஆன்லைன்ல வாங்க முடியும். அப்புறம் என்ன ஓல்ட் மாடல்னு கெத்து காட்டினேன். சார் சார் இருங்க சார். ப்ளேட் ஸ்டாக்ல இல்ல சார். ஆர்டர் பண்ணி ஒரு வாரத்துல மாத்தி குடுத்துடலாம் சார். ஆர்டர் பண்ணவா. 600 ரூ ஆகும்னான். அததான கேட்டேன். நீ கொண்டு வந்து மாட்டுன்னேன். சரின்னு போயிட்டான்.

கொஞ்ச நேரத்துல கர்கான் காரன் ஃபோன் பண்ணான். ஆளு வந்து அட்டண்ட் பண்ணிட்டான்னு தகவல் வந்திருக்கு. வந்தானான்னான். ஆமாம். ப்ளேட் ஸ்டாக் இல்ல. ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வந்து மாட்டுறேன்னு சொல்லீட்டு போயிருக்கான்னேன். ஓ அப்டியா நான் ஃபாலோ பண்ணி அனுப்பி வச்சிட்டு ஃபாலோ பண்றேன். தேங்க் யூ ஃபார் யுவர் கோ ஆபரேஷன்னான்.

இப்பிடியுமா கன்சூமர் சர்வீஸ் இருக்கும்?
--

அடுத்த முறை நமக்கு இதே போல சர்வீஸ் கிடைக்கறதோ இல்லையோ முயற்சி செஞ்சு முடியலைன்னா திட்டிட்டு அப்புறமா புதுசு வாங்கறதை பார்க்கலாம்!

Tuesday, 25 December 2018

போகி பீல் பாலம்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=2176854

இன்றைக்கு இந்தியாவின் மிக நீளமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் திறந்து வைத்து இருக்கிறார். சாலை போக்கு வரத்தும் கீழடுக்கில் ரயில் பாதையும் உள்ளன. எல்லைப்புறத்தில் அமைந்துள்ள இதில் தேவையானால் போர் விமானங்கள் இறங்க முடியும் என்பது நான் பார்க்கும் மறைந்துள்ள நல்ல சேதி!

https://www.google.com/maps/place/Bogibeel+Bridge/@27.5413143,91.3813182,8z/data=!4m5!3m4!1s0x0:0xdd145fb3135988ca!8m2!3d27.4082954!4d94.7603882

Monday, 24 December 2018

என்னத்த...

நல்ல நாள்லேயே செய்தியோட உண்மைத்தன்மையை உறுதி படுத்திக்கறது பாடு. இதுல இப்படி எல்லாம் நடந்தா எதை நம்பறது எதை விடறது? உலகே மாயம்ன்னு சொல்லிட்டு போயிடலாம் போலிருக்கு,

டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா செய்தி போட்டாங்க. மிட்சல் ஜான்சன்னு ஒரு ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் வீரரை பேட்டி எடுத்ததா. ஜஸ்ப்ரித் பும்ராவ சிலாகிச்சு சொல்லி இருந்ததா.

அதுக்கு மிட்சல் ட்வீட் பண்ணார்: "இது எங்கேந்து வந்துது? இத யார் எழுதினாங்க. இதுல சிலதோட ஒத்துப்போறேன்தான். நா யார் கூடயும் உக்காந்து இப்படி பேட்டி கொடுக்கவே இல்லையே?" அப்பறம் "முதல்ல நா மெல்போர்ன்லயே இல்லையே? இந்த செய்தியாளர் கூட கேள்வி பதில் நிகழ்ச்சின்னு ஒண்ணுத்துக்கு உக்காரவே இல்லியே! முதல் ரெண்டு டெஸ்ட் சமயம் நான் நிறைய ஜர்னலிஸ்ட்கிட்ட பேசினது உண்மைதான். ஆனா எந்த பேட்டிக்கும், ரிகார்டிங்க்கும் நான் அனுமதி தரவே இல்லை. மத்தவங்ககிட்ட காஷுவலா பேசினத இப்படி எழுதினா அதில ப்ரைவசி இஸ்யூ இருக்கு. "

டைம்ஸ்ஸ் ஆஃப் இண்டியா மிட்சல்லுக்கு டிவீட் செஞ்சது. நாங்க அந்த ஆர்டிகிலை 'அன்பப்ளிஷ் செய்யபோறோம். எதாவது இஸ்யூ இருந்தா டிஎம்ல சொல்லுங்க." இது ஞாயித்துக்கிழமை.

இன்னைக்கு சொல்றாங்க. "அப்படி உக்காந்து பேட்டி எடுக்கலதான் . நின்னுகிட்டுதான் பேசினாங்க.  அவரோட கமென்ட்ரிக்கு நடு நடுவே பேசினத அடிப்படையா வெச்சுத்தான் இது எழுதி இருக்கு. மிட்சலோட லேசான நினைவு சக்தியை வலுப்படுத்த தோ பாரு போட்டோ!"

பேட்டின்னா ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு புரிதல் இருக்க வேணாமா? சும்மா பேசிட்டு அத செய்தியா போடலாமா? இங்க வேணா அப்படி நடக்கும். அங்கே எல்லாம் பேட்டின்னா காசு கொடுக்கணும். இல்லை ப்ரீன்னு புரிதல் இருக்கணும் இல்லையா?

வெளங்கிரும்!

Sunday, 23 December 2018

இது செய்தி இல்லை

இந்த வலைப்பூ ஆரம்பிச்சதே மீடியால இருக்கற ஏற்றத்தாழ்வை மோசமான ரிபோர்டிங்கை பாத்து கடுப்பாகித்தான்.

இதோ எப்படி ஒரு செய்தியை ப்ரெசண்ட் செய்யக்கூடாது என்கறதுக்கு ஒரு உதாரணம்.

ஒரு விஷயத்தை ரிபோர்ட் செய்யறோம்ன்னா அதப்பத்தி குறைஞ்ச பக்‌ஷ அறிவாவது இருக்கணும். அடுத்து ரிபோர்டர் செய்யற தப்பை காபி எடிட்டர் சரி பார்க்கணும்.

முதல் தப்பு pH என்கிறதை மி.கி பர் லிட்டர்ன்னு ரிபோர்ட் செஞ்சது. இப்பல்லாம் இந்த pH ஹை ஸ்கூல்லேயே வரதே? நாங்கதான் காலேஜ் போய் படிச்சோம். அது வெறும் நம்பர்தானே?

ரெண்டாவது டிஸ்ஸால்வ்ட் ஆக்சிஜன்.

கட்டுரைல சொல்ல வந்த செய்தி என்னவோ நல்ல செய்திதான். கங்கையில் கலக்கிற நீரை சுத்தப்படுத்தறதாலேயும் கான்பூர் மாதிரி இடங்களில தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை சரியாக கையாண்டதாலேயும் கங்கை நீர் மாசு வெகுவாக குறைஞ்சு இருக்கு.

நீர் மாசை காட்டற ஒரு விஷயம் அதுல கரைஞ்சு இருக்கற ஆக்சிஜன்.
இது அதிகமா இருந்தா அது நல்லது. நீர் சுத்தமா இருக்குன்னு பொருள்.

இவர் கொடுக்கற டாடா பாருங்க. தலைகீழா இருக்கு. குறையற வேல்யூ நல்ல தண்ணின்னு காட்டறதா சொல்றாங்க.

அந்த பக்கத்தில கமெண்டுக்கு வழி இல்லே!
நம்ம பங்குக்கு அவங்களுக்கு இது பத்தி ரெண்டு நாள் முந்தி ஒரு ட்வீட் போட்டேன். ஒண்ணும் நடக்காது போலிருக்கு.

சுவாரசியமான செய்தி

இது நல்ல செய்தி என்கிற ரீதியில இங்க இடம் பெற முடியாது. பரவாயில்லை, இது சுவாரசியமான செய்தி!
https://is.gd/PSpaWz
மரபு அணுக்கள் நம்மை கட்டுப்படுத்துது. நம்மோட கண்நிறம், தோல் நிறம், முடி நீளமா குட்டையா, சுருட்டையா இல்லையான்னு ஆரம்பிச்சு புற்றுநோய் வர வாய்ப்பு வரை மரபணுக்கள் நிர்ணயிக்கின்றன.
இதோட மாற்று - அதாவது நாம் மரபணுவை நிர்ணயிக்க முடியுமா-  உண்மையா இல்லையான்னு  ஆராய்ச்சி பல நாட்களாக நடக்கின்றது.

இந்த கட்டுரை சொல்வது: ஆமாம். மலேசியாவில் கடலிலேயே வாழும் ஒரு இனத்தவர்களுடைய மரபணு அவர்கள் அதிக நேரம் நீரில் முழுகி இருக்க தோதாக மாறி இருக்கிறது.
கட்டுரையை படிங்க!


Friday, 21 December 2018

நல்ல செய்திகள்


நம்ம ஊடகங்கள் எல்லாம் பரபரப்பான செய்திகள்ன்னு ஓடற அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் மனச்சாட்சி குத்தும் போலிருக்கும். அதிகமா பாப்புலரா இல்லாத நல்ல செய்திகளை அவங்க கூட பிரசுரிக்கறாங்க.

https://www.indiatoday.in/good-news

https://timesofindia.indiatimes.com/good-news/india/newslist/48953564.cms
இதான் இன்னைய நல்ல செய்தி! 😬😬

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....